Welcome to Dravidian Professionals Forum
Welcome to Dravidian Professionals Forum
Event : Hindu Nationalism and Rise of Majoritarian Democracy (Modi's India)
Article: Aransei
Article Date : 4 August 2021
Article Link : https://www.aransei.com/news/sashi-tharoor-slams-modi-government/
தென்னிந்தியாவில் மாநிலங்களவை தொகுதிகளை குறைக்க பாஜக திட்டம் – சசி தரூர் குற்றச்சாட்டு
பாஜக அதிகம் செல்வாக்கு இல்லாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைகளை குறைக்க ஆளும் அரசு திட்டமிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில், (29-7-21) திராவிட வல்லுனர்கள் மன்றம், ”இந்து தேசியவாதம் மற்றும் ஜனநாயகத்தில் வளர்ச்சி பெரும் பெரும்பான்மைவாதம்” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கை நடத்தியது. இந்த நிகழ்வில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், பிரெஞ்சு அறிஞர் கிறிஸ்டோபி ஜெஃப்ரிலாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய சசி தரூர், ”ஒரு முக்கியமான விவகாரத்தை திராவிட வல்லுநர்கள் மன்றத்திடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பாஜக தன்னுடைய பெரும்பான்மையை பயன்படுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்தி, இந்தி பேசும் மாநிலங்களில் (உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான்) அதிக நாடாளுமன்ற தொகுதிகளையும், தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் பல மாநிலங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படும். இதன் வழியே, தங்களுக்கு தேவையான, இந்தி பேசும் மாநிலங்களை வைத்தே தங்களுக்கு தேவையானவற்றை பாஜக நிறைவேற்றிவிடும். இது மிகவும் ஆபத்தான போக்கு” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் – வெளிநடப்பு செய்த பாஜக எம்பிக்கள்
மேலும் ”வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு போன்ற வாக்குறுதிகளை நம்பி தான் மக்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு, பாஜகவுக்கு வாக்களித்தனர். ஆனால், பாஜக தன்னுடைய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது, தன்னுடைய பெரும்பான்மைவாத தேசியவாதத்துக்கு கிடைத்த வெற்றியாக பாஜக பார்க்கிறது, அதன் தொடர்ச்சியாக தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அது மெற்கொண்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
”பாஜகவின் சித்தாந்தம், இந்து மதம் மற்றும் இந்துத்துவாக்கு இடையிலான வேறுபாடு ஆகியவைப்பற்றி பேசிய அவர், ”பாஜக அடிப்படைவாதம் நிறைந்த தேசிய சிந்தனையை கட்டமைக்கிறது, பாஜக மதத்தை அடிப்படையாக வைத்து யார் இந்தியன் என்பதை தீர்மானிக்கிறது” என்று திராவிட வல்லுநர்கள் மன்றம் நடத்திய இணைய வழி கருத்தரங்கில் சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.